தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருந்த போதிலும் இந்த நடத்தை விதிமுறைகள் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படைகள், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்காக பணம், பொருள் கொண்டு செல்வதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. வருவாய்த் துறை ஒருபுறம், வருமானவரித் துறை ஒருபுறம் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
மதுபான விற்பனை கண்காணிக்கப்படுகிறது. தினசரி பணப்பரிமாற்ற விவரங்களை வங்கிகள் தேர்தல் துறைக்கு அனுப்பி வருகின்றன. இதில் சந்தேகத்துக்கிடமான பதிவுகள் குறித்து வருமானவரித் துறை விசாரணை மேற்கொள்ளும் என தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
‘அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால், அதற்கான ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயம்’ என்று தேர்தல் துறை கூறியுள்ளது. சந்தையில் இருந்து சிறு கடைகளுக்கு காய்கறி அனுப்பும் சாதாரண வியாபாரிகள், மருத்துவமனைகளில் உறவினரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளவர்கள், மகன் அல்லது மகள் திருமணத்துக்கு நகை, பொருட்கள் வாங்க செல்பவர்களின் பணம் சிக்கிக்கொள்ளும்போது உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பணத்தை திரும்பப் பெறமுடியாது. வட்டிக்கு பணம் வாங்கினாலோ, நகையை விற்றாலோ அதற்கான ஆவணங்களைக் காட்ட வாய்ப்பில்லை. இதுபோன்றவர்கள் பறக்கும் படையினரின் சோதனைகளில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவதும் பரவலாக நடக்கிறது.
பொதுமக்களை பாதிக்காத வகையில், நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
சென்னையில் ரூ.23 லட்சத்து 70 ஆயிரத்து 895, நீலகிரி மாவட்டத்தில் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் உட்பட கடந்த 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சோதனையின்போது ரூ.30 லட்சத்து 15 ஆயிரம் பிடிபட்டுள்ளது. இத்தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் தொகை திருப்பி அளிக்கப்படும்.
பொதுவாக ஒரு காய்கறி கமிஷன் ஏஜென்ட், சேகரிக்கும் தொகையை தினமும் இரவில்தான் கடைக்கு கொண்டுவருவார். அவரிடம் அதற்கு ரசீது இருக்காது. எனவே மார்க்கெட்களில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படாது. மருத்துவ அவசர தேவைக்காக பணம் எடுத்துச்செல்லும் பொதுமக்கள் மருத்துவமனை தொடர்பான விவரங்களை உடன் கொண்டு செல்லலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுதொடர்பாக ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை நாங்கள் பறிமுதல் செய்யாவிட்டாலும், வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர் வருமானவரித் துறைக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே பிடிஉத்தரவு பிறப்பித்தும் போலீஸில் சிக்காதவர்கள், தேர்தல் சோதனைகளின்போது பெரும்பாலும் பிடிபடுகின்றனர். எனவே, தேர்தல் வரையிலான இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary: Behavior patterns affecting traders followed the election Rajesh lakkani.