Municipal_busesசென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதை அடுத்து போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் வசதிகளுக்காக சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மாநகராட்சி பேருந்துகள் வசதி செய்யப்பட்டிருந்த போதிலும், அந்த பேருந்துகள் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பல நேரங்களில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகர பேருந்துகளுக்கு தனிப்பாதை ஏற்படுத்த மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதல்கட்டமாக சென்னையில் 96.7 கி.மீ. தொலைவுக்கு மாநகரப் பேருந்துகளுக்கென தனிப் பாதைகளை ஏற்படுத்துவதற்கான விரைவுப் போக்குவரத்து அமைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இந்த விரைவுப் போக்குவரத்து அமைப்பு திட்டத்தை (பிஆர்டிஎஸ்) கொண்டு வர பல்வேறு கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் முதல் கட்டமாக 7 வழித் தடங்களில் மொத்தம் 96.7 கி.மீ. தொலைவுக்கு விரைவுப் போக்குவரத்து அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

1. கோயம்பேடு- பூந்தமல்லி (12.4 கி.மீ.),
2. கோயம்பேடு- அம்பத்தூர் (7.7 கி.மீ.),
3. கோயம்பேடு- மாதவரம் (12.4 கி.மீ.),
4. சைதாப்பேட்டை- சிறுசேரி (24.8 கி.மீ.),
5. சைதாப்பேட்டை- தாம்பரம் (18.2 கீ.மீ.)
6. கோயம்பேடு- சைதாப்பேட்டை (9 கி.மீ.),
7. துரைப்பாக்கம்- கோயம்பேடு (10.6 கி.மீ.)

மேற்கண்ட ஏழு வழித் தடங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநகரப் பேருந்துகளுடன் தனியார் வாகனங்களும் செல்வதால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விரைவாகச் செல்லவும் மாநகரப் பேருந்துகளுக்கென்று தனிப் பாதைகள் அமைக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் தனிப் பாதையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும்.

இந்தத் தனிப் பாதைகளில் பேருந்துகளை இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் குறையும். அதாவது, தற்போது இருப்பதைவிட 50 சதவீதம் அளவுக்கு நேரம் விரயமாவது தடுக்கப்படும். அதேநேரத்தில், நெரிசலால் ஏற்படும் விபத்துகள் குறைவதோடு, அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியின் மதிப்பு ரூ.4.50 கோடியாகும். ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்றுள்ள நிறுவனங்களைத் தெரிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, 7 வழித்தடங்களில் பேருந்துகளுக்கான தனிப் பாதைத் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary: Municipal buses from Chennai to the single Way, Government decision.