election10022016

தமிழகத்தில் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் ஒன்று நேற்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர் பி.சந்தரமோகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் பணி முடிவடையும் நாள் வரையில் அரசியல் கட்சிகளால் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த விவரங்கள் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதன்படி

1. தேர்தல் பிரசாரத்தின் போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது பல்வேறு மொழி பேசுபவர்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையிலோ அல்லது வேறுபாட்டை, பகைமையை வளர்க்கும் அல்லது தூண்டும் வகையான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. மற்ற அரசியல் கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யும்போது கட்சியின் கொள்கை குறித்தே இருத்தல் வேண்டுமே அன்றி தலைவர்களின் பொது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருத்தல் கூடாது.

2. வழிபாட்டுத் தலங்களான கோயில், மசூதி மற்றும் கிறித்துவ தேவாலயங்களில் தேர்தல் குறித்த பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. வாக்குகள் சேகரிப்பதற்கு மதம் ஒரு தடையல்ல. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களிடத்திலும் வாக்கு சேகரிக்கலாம். ஆனால் சாதி அல்லது இனம் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை சேகரிக்கக் கூடாது.

3. அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் சம்மந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக்கூடாது.

4. பொதுக் கட்டடங்களில் மற்றும் தனியார் கட்டடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

5. கல்வி நிலையங்களையோ அல்லது கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு மைதானத்தையோ (அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள்) அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பயன்படத்தக்கூடாது. எந்தவொரு அரசியல் கட்சியும், தனது ஆதரவாளர்களும், வேறொரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவற்றிற்கு எந்தவிதமான இடையூறையும் ஏற்படுத்திட அனுமதிக்கக் கூடாது.

6. எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களின் கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு வேறெந்த கட்சியினரும் இடையூறு / தொல்லை ஏற்படுத்தினால் அதுகுறித்து வேறு துறையினரின் உதவியை நாடவேண்டுமே அன்றி தாங்களே அதற்கு எதிர்ச் செயல் புரியலாகாது.

7. ஊர்வலத்தின்போது பொருட்கள் விநியோகம், வேட்பாளர் சார்பாக வாக்காளருக்கு புடவை, சட்டை போன்ற உடைகளை வழங்கக் கூடாது.

8. ஓற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, பின்வரும் இனங்களுக்கு இணையதளம் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

வாகன அனுமதி

நட்சத்திர பேச்சாளர் கூட்டம் நடத்திட அனுமதி

பொதுக்கூட்டங்கள் நடத்திட அனுமதி

ஊர்வலம் செல்ல அனுமதி

கட்சி அலுவலகம் திறக்க அனுமதி

ஹெலிகாப்டர் பயன்படுத்திட அனுமதி.

www.elections.gov.in இணையதளம் மூலம் மேற்குறிப்பிட்டவைக்கு கட்சிகள் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு அனுப்பப்பட்டு, அவரின் கருத்துக்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுமதி வழங்கப்படும்.

9. தேர்தல் பணிக்காக வேட்பாளர் பொதுக் கூட்டம், ஊர்வலம் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட அனுமதியின் அசல் நகலை வாகனத்தின் முன் கண்ணாடியில் பார்வையில்படும்படி ஒட்ட வேண்டும். ஒளி நகலை ஒட்டக்கூடாது. அனுமதியில் வாகனத்தின் எண் மற்றும் எந்த வேட்பாளருக்கு வழங்கப்பட்டதோ அந்த வேட்பாளரின் பெயர் குறிக்க வேண்டும்.

10. பொதுக்கூட்டங்கள், ஒலிபெருக்கிகள், இரவு 10.00 மணிக்கு பிறகும், காலை 06.00 மணிக்கு முன்பும் நடத்தக்கூடாது.

11. தேர்தல் சமயத்தில் கட்சிகள் தாற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம். ஆனால் இவ்வலுவலகங்கள்,

1.தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கக்கூடாது.

2.மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அதனை ஒட்டி அமைக்கக் கூடாது.

3.பள்ளிகள், மருத்துவமனைகள் சுற்றி அமைக்கக்கூடாது.

4.வாக்குச்சாவடி எல்லையிலிருந்து 200மீ சுற்றளவிற்குள் அமைத்தல் கூடாது.

5.இதில் கட்சிக்கொடி ஒன்றும், 4 அடி cJdJgcd 8 அடிக்கு மிகாத அளவில் ஒரு பேனரும் வைத்துக்கொள்ளலாம்.

12. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் ஒரு வேட்பாளர் அதிக பட்சமாக 3 கார்கள்தான் உபயோகப்படுத்தலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

13. வேட்பு மனு பரிசீலனையின் போது வேட்பாளர், அவரது தேர்தல் முகவர், வேட்பாளரது பெயரை முன் மொழிந்தவர் மற்றும் ஒரு நபர் ஆக மொத்தம் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

14. தேர்தல் பிரசாரம் முடிந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு இடைப்பட்ட 48 மணி நேரத்தில் வேட்பாளர் தேர்தல் சம்மந்தப்பட்ட விவரங்களை வாக்காளர்களுக்கு திரைப்படம், வீடியோ மூலம் திரையிட்டு ஒளிபரப்பக்கூடாது. வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு 48 மணிக்கு முன்பு வாக்கு சேகரிப்பு முடிந்த பிறகு பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துதல் வாகனங்களில் ஒலிபெருக்கியினை அமைத்து பிரச்சாரம் செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

15. வாக்குப்பதிவு நேரம் முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரச்சாரம் முடிந்ததும் வேட்பாளர் மற்றும் அவரது ஏஜென்ட் தவிர, மற்ற அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும். ஆனால் இக்கட்டுப்பாடு அரசியல் கட்சியில் தேர்தல் பணி செய்ய நியமிக்கப்பட்டு இருக்கும், பொறுப்பு அலுவலருக்கு பொருந்தாது.

16. வாக்குச் சாவடியில் முகவர்களாக நியமிக்கப்படுபவர்கள் அந்த வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதியில் வாக்காளராக இருத்தல் வேண்டும். வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதிக்கு வெளியில் வாக்காளராக இருப்பின் முகவர்களாக நியமிக்கப்படக்கூடாது.

17. வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் சார்பில் வழங்கப்படும் பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், வரிசை எண், பாகம் எண், வாக்கு சாவடி எண் மற்றும் வாக்கு பதிவு நாள் ஆகியவை மட்டும் குறிப்பிட்டிருக்க வேண்டும். வேட்பாளரின் பெயர், சின்னம் மற்றும் அவரது புகைப்படம் ஆகியவை இருத்தல் கூடாது.

18. வாக்குச் சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தள்ளி கட்சிகள் பூத் அமைக்கலாம். அதில் ஒரு டேபிள், 2 நாற்காலிகள், ஒரு குடை அல்லது தார்பாலின் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்படும். இவற்றை அமைப்பதற்கு முன் உரிய அலுவலரிடமிருந்து எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும். இதில் 3 முதல் 4 1/2 அடி அளவில் வேட்பாளரின் பெயர்/கட்சி/தேர்தல் சின்னம் கொண்ட பேனர் ஒன்று வைத்துக்கொள்ளலாம்.

19. அனுமதிக்கப்பட்ட முகவர்/வேட்பாளர் மற்றும் வாக்காளர் தவிர வேறு எவரும் தேர்தல் ஆணைய முன் அனுமதியின்றி வாக்குச் சாவடிக்குள் பிரவேசிக்கக் கூடாது.

20. வாக்குச் சாவடிக்கு அருகில், ஆயுதங்களுடன் போகக்கூடாது.

21. சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.28,00,000/- (ரூபாய் இருபத்தி எட்டு இலட்சம் மட்டும்) வரை மட்டுமே செலவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்து உள்ளது.

மேற்கண்ட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடைபிடித்து இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்திட முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

English Summary: What are the electoral code of conduct ? Description of the political parties, the electoral officer.