சமீபத்தில் பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 40% தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு என்றும் மீதியிருக்கும் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தார்.
நிதியமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியாவின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். சார்பு தொழிற்சங்கம் இந்த வரிவிதிப்பை இரட்டை வரிவிதிப்பு என்று கடுமையாக சாடியது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அருண் ஜேட்லி, “இத்திட்டம் குறித்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு பி.எஃப். வரிவிதிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய விரும்புகிறது, எனவே இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது” என்று கூறினார்.
முன்னதாக இந்தத் திட்டம் குறித்து பல குழப்பமான அறிவிப்புகள் வெளியாகின, பி.எஃப். தொகையின் மீதான வட்டிக்குத்தான் வரி என்று முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது, பிறகு அருண் ஜேட்லி தொழிற்துறை கூட்டமைப்பினரிடையே கூறும்போது, அதாவது முழு பி.எஃப். தொகையையும் எடுத்தால் 60% எடுப்புத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும் மாறாக அந்த 60% தொகை ஏதாவது பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் கூறினார்.
இந்த விளக்கத்திற்கு தொழிற்சங்கங்கள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தேயாக வேண்டும் என்பதை மறைமுகமாக இது கட்டாயப்படுத்துவதாக எதிர்ப்புகள் கிளம்பியது. அதாவது தங்கள் பணத்தை எங்கு, எதில் முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கே உரிமை உள்ளது என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்தனர்.
இதற்கு, அருண் ஜேட்லி, வருவாயை அதிகரிக்க இந்த வரிவிதிப்பு இல்லை மாறாக அனைவரையும் பென்ஷன் திட்டத்தில் சேரவைப்பதே நோக்கம் என்று விளக்கம் அளித்தாலும் அந்த விளக்கத்தை தொழிலாளர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் பிரதமர் பார்வைக்கு இது குறித்த அனைத்து கருத்துக்களும், வரிவிதிப்பின் விளைவுகளையும் கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரதமரின் ஆலோசனைப்படி நிதியமைச்சர் அருண் ஜேட்லி பி.எஃப். வரிவிதிப்பு திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்ததாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary: The Finance Minister announced it was scrapping plans for a tax on the amount of PF arunjetli