தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல ஆக்கபூர்வ நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன்படி இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளர்.
சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வானொலியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான ஒரு நாள் தேர்தல் செய்திகளை சேகரிப்பது பற்றிய பயிற்சி முகாம் ஒன்றை ராஜேஷ் லக்கானி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
”தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இது வரை பெறாதவர்கள் எளிய முறையில் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையம் வரும் திங்கட்கிழமை முதல் செயல்படும். அடுத்த மாதம் 15ம் தேதி வரை இத்தகைய வசதி இருக்கும்.
இந்த மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் . இத்தகைய மையங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். தபால் மூலம் பெற விரும்பினால் கூடுதல் துரித அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் 100 சதவீதம் நேர்மை 100 சதவீதம் வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஊடகங்கள் எடுத்து செல்ல வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 மாதிரி வாக்குச் சாவடி என மொத்தம் 1000 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மேலும், வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் நெரிசலை தவிர்க்க 1950 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விவரத்தை தெரிந்துக் கொள்ளும் வசதி இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் மூலம் இதுவரை ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை முறையாக பரிசீலனை செய்து சரியான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தலைமையிலான குழு அரசிடம் ஒப்படைக்கும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
English Summary: Those lacking a voter id card a chance again.Rajesh lakkani Information.