தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16-ஆன் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரில் இருந்து தேர்தல் அதிகாரி உள்பட தொண்டர்கள், பூத் ஏஜண்டுகள் என பல வழிகளில் பெண்கள் தங்களின் பங்களிப்பை செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பா.ஜ.க தலைவர் தமிழசை சவுந்திரராஜன், தி.மு.க. தலைவர் மு,.கருணாநிதியின் மகள் கனிமொழி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, காங்கிரஸ் கட்சியில் குஷ்பு, நக்மா, உள்பட பல பெண் அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாக்குகளை கவரும் சக்திகளாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் அதிகாரிகளின் வட்டாரத்திலும் பெண்களின் பங்கு அதிகமாக இந்த முறை இருப்பதை அறியமுடிகிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளில் 10 பேர் அதாவது பாதிக்க்கும் மேல் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தான், அந்த தொகுதியில் அனைத்து விஷயங்களுக்கும் முழு பொறுப்பு. வேட்பு மனுக்களை பெறுவது, அதனை பரிசீலனை செய்வது, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்குவது, வாக்குச்சாவடிகளை அமைப்பது, ஓட்டுப்பதிவை நடத்துவது, ஒட்டு எண்ணிக்கையை நடத்தி, அதன் முடிவை அறிவிப்பது மற்றும் தொகுதிகளில் விதிமீறல்கள் நடக்காமல் கண்காணிப்பது என அனைத்து பொறுப்பும் இவர்களை தான் சாரும்.
இந்த 10 பெண் அதிகாரிகளின் பெயர்கள் விவரம் பின்வருமாறு: (அடைப்புக்குறிக்குள் அவர்கள் பணியாற்றும் சட்டசபை தொகுதி)
1. டி.என்.பத்மஜா தேவி (ராதாகிருஷ்ணன் நகர்),
2. ஆர்.அழகுமீனா (பெரம்பூர்),
3. மகேஸ்வரி ரவிக் குமார் (திரு.வி.க.நகர்-தனி),
4. எஸ்.சங்கீதா (எழும்பூர்-தனி),
5. எம்.எஸ்.சங்கீதா (ஆயிரம் விளக்கு),
6. கே.பிரியா (அண்ணாநகர்),
7. கே.பொற்கொடி (சைதாப்பேட்டை),
8. கவிதா ராமு (தியாகராயநகர்),
9. எஸ்.அமிர்தா ஜோதி (மயிலாப்பூர்).
10.எஸ்.பி.கார்த்திக்கா (கொளத்தூர்),
மேற்கண்ட பெண் அதிகாரிகள் தவிர ஒவ்வொரு தொகுதிகளுக்கும் இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதிலும் 14 பெண்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என 3 பேரும் பெண்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : The electoral participation of women in Tamil Nadu.