செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழ தகுதியாக உள்ளதா? என்பதை இந்தியாவின் மங்கள்யான், நாசாவின் பல செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் புதிய முயற்சியால் மேலும் ஒரு விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலத்தால் அந்த கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலத்திற்கு எக்ஸோமார்ஸ் 2016 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை சுமந்து கொண்டு கஜகஸ்தானில் உள்ள பைக்காரா விண்வெளி தளத்தில் இருந்து ரஷ்யாவின் புரோட்டோன் எம் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. சுமார் 7 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்யவுள்ள இந்த விண்கலம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை விண்கலம் சென்றடையும்.
இந்த விண்கலத்தில் டிஜிஓ, ஜியோபரேலி ஆகிய இரண்டு ஆய்வு கலன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் டிஜிஓ ஆய்வு கலம் செவ்வாய் சுற்றுவட்டப்
பாதையில் சுற்றி வந்து அந்த கிரகத்தை ஆய்வு செய்யும். அதேநேரம் ஜியாபரேலி என்ற வட்ட வடிவிலான ஆய்வு கலன் செவ்வாயில் நேரடியாக
தரையிறங்கி மீத்தேன் வாயு குறித்து ஆய்வு நடத்தும். கால்நடைகளின் கழிவு, குப்பைகூளம், பூமியின் சுதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது. இதேபோல செவ்வாயிலும் மீத்தேன் வாயு நிறைந்திருப்பதை அங்கு 2012 முதல் ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டறிந்துள்ளது.
எனவே செவ்வாயில் மீத்தேன் வாயு இருப்பதால் அங்கு நுண்ணுயிர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக
நம்பப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காகவே எக்ஸோமார்ஸ் 2016 விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
English Summary: Esomar 2016: Spacecraft Sent to Mars.