தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆ, தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் நிலையில் இந்த முறை தேர்தல் 100% நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள ரவுடிகளில் பட்டியலை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ள தேர்தல் ஆணையம் போலீஸ் டி.ஜி.பி.க்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. அதாவது தேர்தல் நடைபெற்று ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை ஊரை விட்டு வெளியேற்றலாமா? என்று தேர்தல் ஆணையம் யோசனை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் காவல் துறையினர்களின் பதிவேட்டின்படி 6 ஆயிரம் பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தற்போது உளவுத்துறை தயாரித்த ரவுடிகள் பட்டியலில் 20 சதவீதம் பெயர்கள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மாவட்டத்தில் 3,500 பேரும், குறைந்தது திருவள்ளூர் மாவட்டத்தில் 345 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்.
இது தவிர திருநெல்வேலி மற்றும் புறநகர் பகுதியில் 1,980 பேரும், மதுரை மாவட்டத்தில் 1,300 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 பேரும், கோவை மாவட்டத்தில் 815 பேரும், சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா 700 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 416 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 475 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 655 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 605 பேரும் என இந்த ரவுடிகள் பட்டியலில் சுமார் 17,350 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சமூக விரோதிகள், ரவுடிகள், பிரச்சினையை தூண்டுபவர்கள் என பல்வேறு வகையின் அடிப்படையில் இந்த பட்டியலை உளவுத்துறையினர் தயாரித்து வழங்கியுள்ளனர்.
எனவே, குற்றப் பின்னணியில் உள்ள இந்த ரவுடிகளை சட்டமன்ற தேர்தலையொட்டி, ஊரை விட்டு வெளியேற்றினால் என்ன? என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று சொந்த ஊரில் உள்ள ரவுடிகளை, ஊரை விட்டு வெளியேற்றலாமா? என்று காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
English Summary: Up to the election, the commission recommended to banish Rowdy.