parlimentஅரசு தரும் மானியங்களை பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், ஆதார் அட்டையை கட்டாயமாக்கவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் மசோதா மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என மாநிலங்களவை பரிந்துரைத்த திருத்தங்களை நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிராகரித்தார்.

மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நேற்று இந்த மசோதா மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த மசாதோவை அறிமுகம் செய்து வைத்து கூறியதாவது: அரசின் மானியங்கள் தேவைப்படுவோருக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்தாலும், நாடாளுமன்றம் தனது சட்டம் இயற்றும் கடமையிலிருந்து பின்வாங்க முடியாது. இது தவிர முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாவைவிட, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் தனிநபர் ரகசியங்களை பாதுகாப்பதற்கு தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன’ என்று கூறினார்.

ஆனால் இந்த மசோதாவை பண மசோதாவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அருண்ஜேட்லி, மசோதாவை எந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்வது என்பது மக்களவை சபாநாயகரின் தனிப்பட்ட உரிமையாகும். மேலும், அரசு மானியங்கள் ஆதார் அட்டையின் கீழ் வழங்கப்படவிருப்பதாலேயே இது பண மசோதாவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது’ என்று கூறினார்.

ஆயினும் இந்த மசோதாவில் 5 திருத்தங்கள் மேற்கொள்வதற்கு காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களவைக்கு அனுப்பப்பட்டது. மாநிலங்களவையில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் இந்த மசோதா மக்களவைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநிலங்களவை பரிந்துரைத்த திருத்தங்களை ஏற்பதற்கு மக்களவை நிராகரித்துவிட்டது.

தேசிய பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பகம் மற்றும் மத்திய தணிக்கை துறையின் கீழ் இச்சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட திருத்தங்களை ஏற்பதற்கு மக்களவை மறுத்துவிட்டது. இந்த பரிந்துரைகளை ஏற்காதது குறித்து விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் ஜேட்லி, மாநிலங்களவை கொண்டுவந்த திருத்தங்களை மேற்கொண்டால், ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார். பொதுவாக ஒரு மசோதா சட்டமாக வேண்டுமெனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும். ஆனால், பண மசோதாவாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மக்களவையின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே போதுமானதாகும். எனவே, மாநிலங்களவை பரிந்துரைத்த திருத்தங்களை மக்களவை நிராகரித்து விட்டதால், ஆதார் மசோதா விரைவில் சட்டமாகும் என்பது உறுதியாகிறது.

English Summary: Aadhar bill in the Lok Sabha. The rejection of the amendments suggested by the Rajya Sabha.