chennai_egmore_railway

சென்னை நகரில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை உள்பட பல ஊர்களுக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் போன்ற பகுதிகளுக்கு மின்சார ரெயில்களும் இந்த ரெயில் நிலையம் வழியாக சென்று வருகிறது. இதனால் சராசரியாக நாள்தோறும் சுமார் 2 லட்சம் பயணிகள் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையில் விளங்கி வருகிறது. இங்கு வரும் பயணிகளுக்காக 4-வது பிளாட்பாரத்தில் உணவகங்கள், தங்கும் விடுதி, புத்தகக்கடைகள். பால் பூத், கழிப்பிடங்கள், தகவல் மையம், பயணிகள் ஓய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் 4-வது பிளாட்பாரத்தில் செயல்பட்டு வந்த சைவம் மற்றும் அசைவ உணவகங்களை சமீபத்தில் ரெயில்வே அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனர். இதன் காரணமாக பயணிகள் உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பயணிகளின் வசதியை கருதி மீண்டும் இம்மாத இறுதியில் இந்த ஓட்டல்களை திறக்க அனுமதி அளிக்கவுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தம் பெற்றவர்கள் ரெயில்வே நிர்வாகத்துக்கு ரூ.2.2 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். இந்த தொகையை செலுத்த பல முறை கூறியும் செலுத்தவில்லை. இதனால் ரெயில்வே உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்கள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்கள் நடத்துவதற்கான ஒப்பந்த காலம் இன்னும் இருப்பதால், தொகையை செலுத்திவிட்டு ஓட்டல்களை நடத்துமாறு ஒப்பந்ததாரரிடம் பேசி வருகிறோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் நலன் கருதி இம்மாத இறுதியில் மீண்டும் இந்த 2 ஓட்டல்களை திறந்து விடுவோம்.
இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
English Summary: Chennai Egmore railway station arranged to reopen the sealed-hotels.