disabilities

வரும் மே 16ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வரும் நிலையில் மாற்று திறனாளிகள் ஓட்டு போட தனி வசதி செய்து கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வந்த வேண்டுகோள்களை ஏற்று இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக என 17 பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் 17 பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாக்களிக்க முடியும். மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில், தேர்தல் அலுவலர்களாக அரசு மாற்றுத் திறனாளிகள் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, பிரெய்லி வேட்பாளர்கள் பட்டியல் இந்த வாக்குச்சாவடியில் இருக்கும். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்கள் வரிசை எண் பிரெய்லியில் அளிக்கப்பட்டிருக்கும்.
செவித்திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல்களைப் பரிமாற, பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இது தவிர, வாக்குச்சாவடிக்குள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்றுவர 11 ஆயிரத்து 130 சக்கர நாற்காலிகள் தேர்தலில் பயன்படுத்தப்படும். டெல்லியில் கடந்த தேர்தலில் 500 சக்கர நாற்காலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தற்போது தமிழகத்தில்தான் அதிகளவில் சக்கர நாற்காலி வசதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
English Summary: Separate polling stations for people with disabilities in the alternative for the first time in India, Tamil Nadu