கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு மாறாக கடந்த பிப்ரவரி முதல் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பல்வேறு குளிர்பானங்கள், இளநிர் போன்றவற்றை நாடி வரும் நிலையில் பால் பொருட்களை தயாரித்து வெளியிடும் ஆவின் நிறுவனம் பல்வேறு சுவைகளில் குச்சி ஐஸ் வகைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பால், பால் பொருள்கள் ஆகியவற்றை தரமாகவும் குறைந்த விலையும் விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம் நுகர்வோரைக் கவரும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கால் லிட்டர் பால் பாக்கெட் விற்பனை, டிரைவ்-இன்-பார்லர், சிறிய, பெரிய குல்பி, லாங் லைஃப் குலோப் ஜாமூன் போன்ற பல புதிய முயற்சிகளை ஆவின் நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது. இந்த பொருட்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது கோடை வெயிலில் பொதுமக்கள், குழந்தைகளைக் குளிர்விக்கும் விதமாக ஆவின் குச்சி ஐஸ் வகைகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய வகை குச்சி ஐஸ்கள் பல்வேறு சுவைகளில் தங்களது விற்பனையகங்களில் கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆவின் உற்பத்தி செய்யும் பால், நெய், வெண்ணெய், இனிப்பு உள்ளிட்ட பால், பால் சார்ந்த பொருள்களுக்கு நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. நுகர்வோருக்குத் தரமான பால் உப பொருள்களை வழங்குவதற்காக, சென்னை அம்பத்தூரில் ரூ.32.40 கோடியில் புதிதாக பால் உப பொருள்கள் தயாரிக்கும் பண்ணை அமைக்கப்பட்டது.
இந்தப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் தயாரிப்புத் திறன் நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டரில் இருந்து, 15 ஆயிரம் லிட்டராகவும், பால் உபபொருள்கள் பண்ணையின் உற்பத்தித் திறனானது, தற்போதைய அளவான நாள் ஒன்றுக்கு 7,500 லிட்டர் என்ற அளவிலிருந்து, 68 ஆயிரம் லிட்டர் என 9 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல பன்னீர், தயிர், லஸ்ஸி, புரோபயோடிக் லஸ்ஸி, மோர் பாக்கெட் உள்ளிட்டவற்றின் உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பொதுமக்களைக் கவரும் வகையில், கோடையில் புதிய ரக ஐஸ்கிரீம், குளிர்பானம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும். அந்த வரிசையில், நிகழாண்டு கோடை வெயிலில் பொதுமக்கள், குழந்தைகளைக் கவரும் வகையில் குச்சி ஐஸ் வகைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மாங்கோ, ஸ்ட்ராபெர்ரி, கிரேப், பைனாப்பிள், ரோஸ்மில்க் எனப் பல்வேறு சுவைகளில் குச்சி ஐஸ்கள் விற்பனைக்குக் கிடைக்கும். குச்சி ஐஸ் ஒன்றின் விலை ரூ.10 ஆகும். இன்னும் ஓரிரு நாள்களில், ஆவின் பாலகங்களில் குச்சி ஐஸ்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்றார் அவர்.
English Summary: 10rs Gulfy in Aavin .New Decision to keep a Cool Summer.