தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்தூ தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் வேகமாக நடைபெற்று வந்தது.
சட்டமேதை அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது சிலைகளை கிழிந்த அழுக்கு துணிகளை பயன்படுத்தி மூடி வந்தனர். ஒருசில பகுதிகளில் சாக்கு பைமூலம் சிலைகளை மறைத்ததுடன் கழுத்தில் கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர். அரசியல் தலைவர்கள் சிலைகள் மட்டுமின்றி ஒருசில இடங்களில் திருவள்ளுவர் சிலையையும் மூடி வைத்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
மறைந்த தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், தமிழறிஞர்கள் சிலைகளை மறைப்பது தேவையில்லாத ஒன்று என மக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதுகுறித்து ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்கள் சிலைகளை மறைக்க தேவையில்லை. தேர்தல் அலுவலர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக எங்களை அணுகி விளக்கம் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அம்பேத்கார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
English Summary: Do not cover the statues of late leaders. Rajesh lakkani directive.