theri_audio_lunchஇளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சத்யம்திரையரங்கத்தில்  மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு விஜய், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் தாணு, எமிஜாக்சன், நடிகர் சங்க தலைவர் நாசர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் இறுதியில் பேசிய விஜய், ‘தெறி’ படத்தை பொறுத்தவரை என்னுடைய படத்தை நானே பெருமையாக பேச விரும்பவில்லை. பொதுவாக ஒரு ஆடியோ விழாவில் இசையமைப்பாளர்தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த விழாவில் ஹீரோவே இசையமைப்பாளராக உள்ளார். அவருடைய இசை இந்த படத்தின் பெரிய பலம்,

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சமந்தா மற்றும் எமிஜாக்சன். ஒருத்தர் செல்பி புள்ள, இன்னொருத்தர் குல்பி புள்ள.என்னுடைய ரசிகர்கள் அனைவரும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். உங்களது முந்தைய சாதனையை நீங்கள்தான் உடைத்தெறிய வேண்டும். அதே நேரத்தில் உங்கள் வெற்றியை பார்த்து நீங்களே பெருமை படாதீர்கள். அடுத்தவன் வச்ச இலக்கை நீ அடையனும்னு நினைக்காத, நீ வச்ச இலக்கை அடுத்தவன் அடையனும்னு நினைக்கனும்’ என்று கூறினார்.

இந்த விழாவில் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, ‘இப்பவும் எனது விருப்பத்துக்குரிய நடிகர் விஜய்தான். அவரை வைத்து இன்னும் பத்து படங்கள் தயாரிக்கவும் நான் தயார். அவருடைய இதயத்தில் எனக்கு ஒரு நெருக்கமான இடம் உண்டு என்பதை நான் அறிவேன். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர் மட்டுமின்றி அவர் ஒரு ஜெண்டில்மேன்’ என்று கூறியுள்ளார்.

அட்லி குறித்து தாணு கூறுகையில் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் பாணியில் அட்லி திரைக்கதை மற்றும் பாடல்களை அமைத்துள்ளார். இவரை ஷங்கர் மற்றும் முருகதாஸ் ஆகியோர்களின் கலவை என்று கூறலாம்.

இந்த இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.  மொத்தம் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலரில் இருந்து படத்தில் தந்தை-மகள் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. இயக்குனர் அட்லி கூறியது போல் ரொமான்டிக் விஜய், மாஸ் விஜய், அவர் குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச, அவருக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஜய் என்று மூன்று கெட்டப்புகளில் அசத்தியுள்ளார் விஜய்.

‘தெறி’ படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

English Summary: Vijay in theri  audio launch in chennai sathyam theater.