12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிவு வந்த பின்னர் மாணவர்கள் புதியதாக கல்லூரியில் சேரும்போது அவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை ராகிங். இந்த ராகிங் குறித்து மாணவர்களின் பயத்தை போக்கும் வகையில், ராகிங்கை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலாளர் ஜஸ்பால் எஸ்.சாந்து அவர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து, ராகிங் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் யுஜிசி விதிமுறைகளை வரையறுத்துள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
ராகிங் தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் தேசிய அளவில் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் வசதி (1800-180-5522) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராகிங் கொடுமையாக்கு ஆளாகும் மாணவ-மாணவிகள் இந்த எண்ணுக்கு புகார் செய்யலாம்.
குற்றச்செயலாக கருதப்படும் ராகிங்கை தடுத்துநிறுத்த உயர் முன்னுரிமை அளிப்பதுடன் ராக்கிங் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகிங் தொடர்பாக மாணவ-மாணவிகள் குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்கள், ஓபிசி மாணவர்களின் புகார்களை பதிவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary: UGC Crackdown for students fear of ragging.