DA24316மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு நேற்று புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் மத்திய தொலைத்தொடர்புத் துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது” என்று கூறினார். இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் இந்த உயர்வு மூலம் அடிப்படை சம்பளத்திலிருந்து 119 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 125 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 58 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,725 கோடி கூடுதல் செலவாகும்.

பணவீக்கத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

English Summary: DA for central government employees up from 119% to 125%.