பெல்ஜியம் தலைநகர் புரூசெல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் இதுவரை 35 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த தினத்தில் விமான நிலையத்துக்கு ஒரு டாக்சியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தனித்தனியாக பிரிந்து தங்கள் கையில் இருந்த சூட்கேஸ்களை வெவ்வேறு ‘டிராலி’களில் வைத்து புறப்பாட்டு பகுதியின் வரவேற்பு கூடத்துக்கு தள்ளிச் சென்றுள்ளனர் என்பதை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கையுறை அணிந்திருந்த அவர்கள் தோள்களில் மாட்டியிருந்த கைப்பைகளில் வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பெல்ஜியம் காவல்துறை நாஜிம் லாச்ரோவி என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான மூன்று நபர்களில் நாஜிம் லாஸ்லாச்ரோவியும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவரும் பிடிபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாகவும், புதுடெல்லியிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் வந்த தகவலையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலைய நுழைவாயில் பகுதியில் வாகனங்களை போலீசார் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். விமான நிலைய சுற்றுப் பகுதிகள் ரகசிய கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை போலீஸார் தெரிவித்தனர்.
English Summary: 5 Layer Security in Chennai Airport.