வட மாவட்டங்கள் மற்றும் வட இந்தியாவின் பயணிகளின் வசதிக்காக மாதவரம் பகுதியிலும், தென் மாவட்டங்களின் பயணிகளின் வசதிக்காக கூடுவாஞ்சேரியிலும் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க சி.எம்.டி.ஏ திட்டமிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும் இந்த பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான் வட மாநிலங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் கிளம்பி செல்கின்றன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகரின் வடக்கு, தெற்குப் பகுதியில் இருப்பவர்களும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தோரும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வதில் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு வண்டலூர், வேளச்சேரி, மாதவரம் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2011ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. ஆனால், இந்த இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. வேளச்சேரி பகுதியில் முதலில் 12 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், சில நடைமுறைச் சிக்கல்களால் வேளச்சேரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இதேபோல, ரூ. 376 கோடியில் வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 65 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்குகள் காரணமாக வண்டலூரிலும் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் மாதவரம் அருகே உள்ள கனரக வாகன நிறுத்தம் பகுதியில் 8 ஏக்கரும், ஜி.என்.டி. சாலை, உள் வட்ட சாலை சந்திப்பில் உள்ள காலியான இடத்திலும் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளது. சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை-5, துறைமுகச் சாலை, சென்னை இணைப்புச் சாலைகளை எளிதாக இணைக்கும் விதமாக இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைக்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால், வட மாநில, வட மாவட்டப் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வர வேண்டிய தேவை இருக்காது. தற்போது, இந்தத் திட்டத்துக்கான கருத்துரு, திட்ட அறிக்கை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். அதேபோல் தென் மாவட்ட பயணிகளுக்கென, கூடுவாஞ்சேரி- நந்திவரம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இடத்தை தேர்வு செய்துள்ளது. 5-ஆவது முறையாகத் தேர்வு செய்யப்பட்ட இந்த இடத்திலாவது பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: கூடுவாஞ்சேரிக்கு அருகே நந்திவரம் பகுதியில் நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலையொட்டி உள்ள 20.54 ஏக்கர் புறம்போக்கு நிலம் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏதுவாக உள்ளது. புதிய பேருந்து நிலையத் திட்டத்துக்கு இந்து அறநிலையத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதற்கு முன்பாக, புறம்போக்கு நிலப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary: New Bus stand in Madavaram and guduvanchery. CMDA Project.