தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு இன்று சென்னை வருகிறது. இதனையொட்டி இன்றும் நாளையும் புதுச்சேரியிலும், வெள்ளிக்கிழமை அன்று சென்னையிலும் தேர்தல் ஆணையர்கள் முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிடவுள்ளனர்.
இது குறித்து புதுடெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணைய உயரதிகாரி நேற்று கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக வரும் மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பநிலை தேர்தல் நிர்வாகம், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்கெனவே தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த பிப்ரவரியில் இரு மாநில அரசு உயரதிகாரிகளுடனும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகள் குறித்து தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்து ஆணையம் தேர்தல் பணிகளின் செயலாக்கம் தொடர்பாக கேட்டறிந்தது. இந்த நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் அச்சல் குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை செல்கின்றனர்.
சென்னையில் இருந்து அவர்கள் கார் மூலமாக புதுச்சேரிக்கு செல்கின்றனர். புதுச்சேரியில் அரசுத் தலைமைச் செயலர், காவல் துறை ஐஜி, டிஐஜி, கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களான யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதே போல, தேர்தல் பணிகள் குறித்து புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
புதுச்சேரியில் ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை இரவு சென்னைக்கு அவர்கள் வருவர். பின்னர் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவர். இதைத் தொடர்ந்து, தேர்தல் பொறுப்பாளர்களான மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர், நகர காவல் ஆணையர்கள், மாநில அரசு தலைமைச் செயலர் ஆகியோர் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துவர்.
தேர்தல் பாதுகாப்பு, நடத்தை விதிகள், தேர்தல் புகார்கள் மீதான நடவடிக்கைகள், வாக்குப்பதிவின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையர்கள் விளக்குவர். தேர்தல் செலவினங்களுக்கான பார்வையாளர்கள், காவல் துறையைச் சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வர். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தில்லி திரும்புகின்றனர். இவ்வாறு தேர்தல் உயரதிகாரி கூறினார்.
English Summary: India’s Chief Election Commissioner Nazim Zaidi and his crew are going to inspect Tamilnadu and Pondichery from today.