தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சரியான அக்னி நட்சத்திர வெயில் நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க பல புதிய வசதிகளை தேர்தல் ஆணையம் செய்யவுள்ளது. முதல்கட்டமாக வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நிலையை மாற்றியமைக்க முடிவு செய்து முதல்முறையாக வாக்குச்சாவடி மையங்களில், இருக்கைகளுடன் கூடிய வாக்காளர் காத்திருப்பு அறை வசதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்காக நிழல் தரும் வகையில் ‘ஷாமியானா’ அமைக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அல்லது குடிநீர் பாக்கெட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். வாக்காளர்களின் வசதிக்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், கூடுதல் அறைகள் இருக்கும் பட்சத்தில், 2 அல்லது 3 அறைகள் இருக்கை வசதிகளுடன் வாக்காளர் காத்திருப்பு அறையாக திறந்து வைக்கப்படும். வாக்குச் சாவடியில் வரிசையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்து குறுஞ்செய்தி மூலம் வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படும்’ என்று கூறினார்.
இந்த தேர்தலில் 100% சதவீத வாக்கு சதவீதத்தை எட்டுவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான முயற்சிகளை தீவிரமாக செய்து வருகிறது. எனவே வெயில் காரணமாக வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் வீட்டிலேயே முடங்கியிருக்க கூடாது என்ற எண்ணத்தில் மேற்கண்ட வசதிகளை செய்து தர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Shamina and water arrangements will be made available in polling booths, Election Commission.