10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கவுள்ள மாணவர்கள் உள்பட எந்த பிரிவு மானவர்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எந்த பள்ளிகளும் நடத்தக்கூடாது என்றும் அவ்வாறு மீறி நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் உயர்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் 2016-2017-ம் ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் 20 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். இந்த பள்ளிக்கூடங்களில் வருகிற ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்ததும் தான் பாடம் நடத்தப்படும். ஆனால் பல தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும்போதே கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு 10ஆம் வகுப்பு பாடம் நடத்தப்பட்டு வருவதாகவும் அதேபோல 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு 12ஆம் பாடம் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு முன்கூட்டியே வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூர், திருச்சி, சேலம், மதுரை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூட விடுமுறை வரும் 22ம் தேதி முதல் விடப்படுகிறது. விடுமுறையிலும் வருகிற கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்க உள்ள மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் அவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்று பல தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் நினைக்கிறது. ஆனால் வருகிற 22ம் தேதி முதல் சிறப்பு வகுப்பு நடத்தினால் மாணவர்கள் கடும் வெயிலை சந்திக்க நேரிடும். எனவே பெரும்பாலான தனியார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளனர். சில தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளை அந்தந்த வருடம் பள்ளிக்கூட நாட்களில் மட்டுமே நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் அவ்வாறுதான் நடத்தி வருகிறார்கள். 2016-2017-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பாடங்களை பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளாக நடத்த பல தனியார் பள்ளிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவ்வாறு எந்த பள்ளிகளும் வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு வகுப்புகளை நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

English Summary: No Special Classes for 10th and 12th Standard Students, School Education Department