தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது. தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையுமே ஒரு வாக்காளருக்கு பிடிக்காவிட்டால் அவர் நோட்டாவுக்காவது வாக்குப்பதிவு செய்து 100% வாக்குப்பதிவை அடைய உதவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் ஒரு தொகுதியில் நோட்டா வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்பது குறித்து ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையே இந்த தேர்தலிலும் கடைபிடிக்க உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த சுற்றறிக்கையில் வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானால் என்ன செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
‘ஒருவேளை எங்கேயாவது வேட்பாளர்கள் பெறும் வாக்குகளைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானால், நோட்டாவுக்கு அடுத்ததாக எந்த வேட்பாளர் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு, அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’ என்ற தெளிவான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
ஆகமொத்தம் தனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை சட்ட ரீதியாக பதிவு செய்வதற்கான ஒரு ஏற்பாடுதான் நோட்டா என்றும் இதைத் தவிர, நோட்டாவுக்கு வாக்களிப்பதால் தொகுதியின் வழக்கமான தேர்தல் நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது என்பதும் உறுதியாகியுள்ளது.
எனவே நோட்டா வெற்றி பெற்றால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் ஆகிய நோட்டா குறித்த வதந்திகளை தடுக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
English Summary : Election Commission explains what happens when NOTA wins.