தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை கிட்டத்தட்ட அறிவித்துவிட்டாலும், வேட்பாளர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருவதால் முதல் நாளில் அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தேதியில் இருந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2 ஆம் தேதி கடைசியாகும். வாக்குப் பதிவு மே 16 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்கியதும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களில் பணம் எடுத்துச் சென்றால்கூட அது சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்காக 234 தொகுதிகளிலும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொகுதியிலேயே தங்கியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடையும். பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஞாயிறு, அரசு விடுமுறை தினங்களில் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியாது.

English Summary : Tamil Nadu election nominations starts day after tomorrow.