சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தாலும் அதன் பின்னர் ஏற்படும் போலீஸ் விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு பயந்தே பலரும் சாலை விபத்தை கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். எனவே இந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் மூலம் தற்போது மத்திய அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுபவர்கள் தானாகவே முன்வந்து ஏதாவது தகவல் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் விசாரணை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்க கூடாது என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைவிபத்து குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து வழிமுறைகளை வகுத்து தருவதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு தனது பரிந்துரைகளை அளித்தது.

அந்த பரிந்துரைகள் பின்வருமாறு:

சாலை விபத்தில் சிக்குவோரை காப்பாற்றுகிறவர்கள் எந்த அல்லலிலும், தொல்லையிலும் அகப்படாமல் தங்களை காத்துக் கொள்வதற்கு ஏற்ற வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன. மதுபானம் அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டி, சாலை விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு எதிராக சட்டத்தின் பிடி இறுகுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில்கள் நிறுவவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அந்த வழிமுறைகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நீதிபதிகள் வி.கோபால கவுடா, அருண் மிஷ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு பரிசீலித்து கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும், சாலை விபத்தில் சிக்குகிறவர்களை காப்பாற்றும் வகையில் விரிவான விளம்பரம் தருமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இதற்கான அரசாணையை மத்திய அரசு இன்று வெளியிட்டது. சாலை விபத்துக்களில் போது உதவி செய்பவர்களின் பெயர் முகவரியை கேட்டு கட்டாயப்படுத்தகூடாது. உதவி செய்பவர்களை சாதி மதம் கடந்து உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி சாலை விபத்துகளில் சிக்குவோரை தயக்கமின்றி பொதுமக்கள் காப்பாற்றுவதற்கு வழி பிறக்கும்.

English Summary : Central Government announce that public can help in accident zone without hesitation.