கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் மத்திய, மாநில அரசு இணைந்து ஆதார் அட்டையை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரசு தரும் மானியம் பெறுதல், அடையாள அட்டை உள்பட பல்வேறு பயன்கள் கொண்டதாக விளங்கி வரும் இந்த ஆதார் அட்டை திட்டத்தை உலக வங்கி பாராட்டியுள்ளது. அதுமட்டுமின்றி ஆதார் அட்டை விஷயத்தில் இந்தியாவின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு பிற நாடுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை இயக்குநர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு உலக வங்கி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அடையாள அட்டை திட்டத்தை உருவாக்குவதில், இந்தியாவின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இதர நாடுகளுக்கு பரிந்துரைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்’ என்று அஜய் பூஷண் பாண்டே கூறியுள்ளார்.
முன்னதாக ஆதார் அடையாள அட்டை திட்டம் குறித்து, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளிடம் அஜய் பாண்டே விளக்கினார். ஒரு ஆதார் அட்டை வழங்க ஆகும் செலவு, ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவானதாகும்; நேரடி மானியத் திட்டங்களை திறம்படச் செயல்படுத்துவதற்கு, ஆதார் அடையாள எண் பயன்படுகிறது; இதன் மூலம் அரசுக்கு ஏராளமான பணம் மிச்சமாகிறது என்பன போன்ற முக்கிய அம்சங்களை அஜய் பாண்டே எடுத்துரைத்தார்.
இதனிடையே, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் (ஏபிஇசி) இணைய இந்தியா விருப்பம் தெரிவித்ததை, அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஆன்டனி பிளிங்டன் கூறும்போது, “ஏசிஇசி-யில் இணைவதற்கான இந்தியாவின் விருப்பத்தை வரவேற்கிறோம். இதுகுறித்து இந்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று கூறினார்.
English Summary : World Bank’s praise for India’s Aadhaar project.