ரயில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுக்களை முன்கூட்டியே ரிசர்வ் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திடீரென பயணம் ரத்து ஆனால், முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களை ரத்து செய்வதில் பயணிகளுக்கு சிரமம் இருந்து வந்தது. ஆனால் தற்போது பயணிகளின் வசதியை முன்னிட்டு, ‘139’ என்ற எண்ணை அழைத்து ரயில் டிக்கெட்டுக்களை ரத்து செய்யும் வசதியை ரயில்வேத்துறை அமல்படுத்தி உள்ளது. இந்த எளிய வசதியை கடந்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த நிலையில் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து நேற்று முதல் இந்த வசதி பொதுமக்கள் வசதிக்காக அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த திட்டத்தை சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியபோது, ”இந்த புதிய திட்டத்தின் படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் (கன்ஃபர்ம்) வைத்திருக்கும் பயணிகள், தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், ‘139’ என்ற எண்ணுக்கு போன் செய்து ரத்து செய்ய வேண்டிய டிக்கெட் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
அப்போது, அந்த பயணிக்கு ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ (ஓ.டி.பி.) வழங்கப்படும். பின்னர் அந்த பாஸ்வேர்டை ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் கொடுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறலாம்.
இதைப்போல ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், அந்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால் அந்த இணையதளத்தில் கொடுத்துள்ள வசதியை பயன்படுத்தியே ரத்து செய்து கொள்ளலாம். இந்த 2 முறைகள் மூலம் டிக்கெட் ரத்து முறையில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது” என்றார்.
English Summary : Railway Minister inaugurated new facility to cancel train tickets.