Jand kதமிழக சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 319 ஆண்கள், 787 பெண்கள், 3 திருநங்கைகள் என 7 ஆயிரத்து 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இரண்டு தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர் தலைமையில் இந்த பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்புமனு பரிசீலனை முழுவதும் வீடியோ மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது.

சென்னை ஆர்.கே. நகரில் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

யார் யாருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் இன்று மாலை தெரியவரும் என்றும் போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும் என்றும் அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

English Summary: Nominations began. Jayalalithaa, Karunanidhi Nominations Acceptance.