தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருவதை அடுத்து மாலை 6 மணிக்கு மேல் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கடைபிடித்து வரும் நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் செய்ய வேண்டியது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு விளக்கியுள்ளார்.
இதன்படி சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களுக்கு சில்லறை மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை தினமான மே 19 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பதற்றமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 9,360-லிருந்து 6,300 குறைக்கப்பட்டுள்ளது.
அதிகமாக பணம் செலவிடப்படும் முக்கியப் பிரமுகர்களின் தொகுதிகளாக 94 சட்டப் பேரவைத் தொகுதிகள் அறியப்பட்டு அதில் 25 தொகுதிகள் அதிமுக்கியத் தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம்.
தேர்தல் பிரசார நேரத்துக்கு பின்னர் செய்தி வடிவிலோ, வேறு வகையான பிரசார படங்களையோ ஒளிபரப்பு செய்யக் கூடாது. அச்சு ஊடகங்கள் விளம்பரங்கள் வெளியிடத் தடை இல்லை. ஆனால், அந்த விளம்பரங்களுடன் பத்திரிகைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது. விளம்பரங்களை அகற்றி பத்திரிகைகளை பதிவேற்றம் செய்யலாம். மே 16- ஆம் தேதியன்று மழை பெய்தாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இருந்து தயாரித்து தஞ்சாவூருக்கு எடுத்து வரப்பட்ட அட்டையிலான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிடிபட்டுள்ளன. இதுபோன்று இயந்திரங்களை விழிப்புணர்வு
தொகுதிக்கு தொடர்பில்லாத பிறநபர்கள் அங்கியிருந்து வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. பிரசாரம் முடிவடைந்தவுடன், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும்
இவ்வாறு தமிழக தலைஅமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் மொத்தம் 60,001 வாக்குச் சாவடிகள் உள்ளதாகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவு முடியும் வரை தடையில்லா மின்சாரம் மிகவும் முக்கியமானது. எனவே வாக்குப்பதிவின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சேமித்து வைக்கும் வாக்கு எண்ணும் மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வழங்கல் துறை இயக்குநர் பாண்டி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மின்சார பயன்பாடு தற்போது 13,500 மெகாவாட்டாக இருந்து வருகிறது. தேர்தல் தினத்தன்று தடையில்லாத மின்சார வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை மழையின் காரணமாகவோ, பிற காரணங்களாலோ மின்தடை ஏற்பட்டால் அதனை உடனே சீர்படுத்த மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள். ஒரு துணை மின் நிலையத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட துணை மின் நிலையத்தின் பொறியாளர்கள் தொலைபேசி எண்ணும் வழங்கப்படும். அதனால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனை உடனே சீரமைக்க முடியும் என்று கூறினார்.
மேலும் தமிழகம் முழுவதும் 68 வாக்கு எண்ணும் மையங்கள் செயல்பட உள்ளதாகவும், சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி என 3 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Election commission restrictions from this evening.