சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் மழையால் ஏற்படும் வெள்ளம் உள்பட பல்வேறு பாதிப்புகளை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070 என்ற எண்ணைத்தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் சென்னையில் ஏற்படும் வெள்ளபாதிப்புகள் குறித்து 1913 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க 044-27661200, 27667272, 27662222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கனமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க 044-27237424, 27237425, 27237107, 2742692 தொடர்பு கொள்ளலாம் அல்லாது 044-27222000 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 270 பேர் 6 குழுக்களாக சென்னைக்கு வந்துள்ளதாகவும், 24 படகுகளுடன் வந்துள்ள அவர்கள் சென்னை அடையாறு மற்றும் மணலி ஆகிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டால் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட அவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த 3ஆம் ஆண்டு, 5ஆம் ஆண்டுக்கான சட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்தார்.

English Summary : Chennai, Tiruvallur, Kanchipuram rain impact contact numbers.