சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குறிப்பாக நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியுள்ளதாகவும், அது சென்னை அருகே 125 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

”சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தனது 17.5.2016 அன்று மாலையில் வெளியிட்ட அறிக்கையில், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும், இது 18.05.2016 காலை சுமார் 5.30 மணி அளவில் சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிகமான கனமழையும் (அதாவது 25 செ. மீட்டருக்கும் அதிகமான கனமழை), கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிகுந்த கனமழையும் (அதாவது 12 செ. மீட்டருக்கும் அதிகமான கனமழை) பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேக காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மழை அதிகம் பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பப்பட்டுள்ளார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

English Summary : Depression near Chennai Government instructions to the public.