ஒரு குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு அடுத்த ரயிலில் முன்னுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு விகல்ப் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படும்.

ஏற்கனவே இந்த திட்டம் டெல்லி-ஜம்மு மற்றும் டெல்லி-லக்னோ ஆகிய வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் தற்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை, டெல்லி-சென்னை, டெல்லி-பெங்களூரு மற்றும் டெல்லி-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன்படி, முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் இயக்கப்படும் செல்லும் அடுத்த ரயிலில் படுக்கை வசதி உறுதி செய்யப்படும்.

அதே நேரத்தில் விகல்ப் திட்டம் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

விகல்ப் திட்டத்தின் கீழ் மாற்று ரயிலில் ஒதுக்கீடு பெற்ற பயணிகள், பயணத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல், வித்தியாச கட்டணத் தொகை திருப்பித் தரப்படவும் மாட்டாது. இவ்வாறு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

English Summary : Railway department announced a new offer for waiting list passengers.