Narendra_Modi_8_10_14பாரத பிரதமர் நரேந்திரமோடி இதுவரை தனது இணையதளங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் உள்பட ஆறு பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதள சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் மற்றும் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுடன் தன்னுடைய தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் அலுவலக இணையதள சேவையை முக்கிய பிராந்திய மொழிகளிலும் வழங்க அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்க மொழி, மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளின் சேவை தற்போது தொடங்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த புதிய மொழிகளின் புதிய சேவைகளை தொடங்கி வைத்தார்.

இதற்கு முன்பு www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் இடம்பெற்றன. இனிமேல் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் அலுவலக செய்திகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ”பிராந்திய மொழி சேவையால் மக்களுடனான எனது உறவு வலுப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களின் கருத்துகள், எண்ணங்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் அலுவலக இணையதளத்தின் தமிழ் சேவை: http://www.pmindia.gov.in என்பது குறிப்பிடத்தக்கது

English Summary: Prime Ministers Web service Starts in Six Languages including Tamil.