srhஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னரும் தவானும் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதல் மிகவும் அதிரடியாகவும் அதே நேரத்தில் விக்கஎட்டுக்களை இழக்காமலும் ஆடிய இந்த ஜோடி முதல் 6 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தவான். இருப்பினும் வார்னர் வழக்கம்போல அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து ஹென்ரிக் மற்றும் வார்னர் விக்கெட்டுக்கள் விழுந்தனர். இந்த நேரத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கிய யுவ்ராஜ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். இறுதியி ல்ஐதராபாத் அணி. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

209 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை பெறலாம் என்ற கடினமான இலக்கைத் தாண்டுகிற முயற்சியில் பெங்களூர் அணியினர் களமிறங்கினார்கள் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயிலும் விராட் கோலியும். ஆரம்பம் முதலே தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெயில். பரிந்தர் ஸ்ரன் வீசிய 4-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். 25 பந்துகளில் அரை சதம் எடுத்தார் கெயில் தொடர்ந்து அடித்து ஆடிய நிலையில் 9-வது ஓவரிலேயே 100 ரன்களை பெங்களூர் கடந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில், 76 ரன்களில் கட்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 32 பந்துகளில் அரை சதமடித்த விராட் கோலி எதிர்பாராதவிதமாக 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே டிவில்லியர்ஸும் ( 5 ரன்கள்) அவுட் ஆனார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 47 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுகிற முஸ்தாபிஜுர் ரஹ்மானும் புவனேஸ்வர் குமாரும் அந்த 4 ஓவர்களையும் பகிர்ந்துகொள்வதால் இக்கட்டான நிலைமைக்க்குள்ளானது பெங்களூர் அணி. 17-வது ஓவரில் முஸ்தாபிஜுர் பந்துவீச்சில் 11 ரன்களில் ஷேன் வாட்சன் ஆட்டமிழந்ததால் ஆட்டம் மேலும் பரப்பானது. துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். 9 ரன்கள் சேர்த்த பின்னி, ஹூடாவின் அட்டகாசமான ‘த்ரோ’வில் ரன் அவுட்டானார். 7 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தபோது சிக்ஸர் அடித்தார் சச்சின் பேபி.

இதனால் கடைசி ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். சிறப்பான பந்துவீச்சால், கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களின் முடிவில், பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வார்னர் தலைமையில் விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது.

English Summary : IPL Cricket: Hyderabad team championship.