கடந்த 2014 மற்றும் 2015 ஆகிய 2 ஆண்டுகளிலும் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரிகளின் தரவரிசையை கண்டறிய உதவியது. ஆனால் இந்த ஆண்டு கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிடப்போவதில்லை என அண்ணா பல்கலை தெரிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமின்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2016-17ஆம் கல்வியாண்டு புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் மொத்தம் 527 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் கிடையாது. தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிரத்தில் 372 பொறியியல் கல்லூரிகளும், ஆந்திராவில் 328 பொறியியல் கல்லூரிகளும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 296 பொறியியல் கல்லூரிகளும், தெலங்கானாவில் 284 பொறியியல் கல்லூரிகளும், மத்தியப் பிரதேசத்தில் 211 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. மற்ற மாநிலங்களில் 200-க்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளே உள்ளன.
தமிழகத்திலுள்ள அதிக பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் அவற்றில் தரமான பொறியியல் கல்வியை தரும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலை வெளியிட்டது. ஆனால் இந்த ஆண்டு அதுபோன்ற நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லாததால் தரவரிசை பட்டியலை வெளியிடும் திட்டம் இல்லை என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகம் தயக்கம் காட்டி வருவது ஏன் என கல்வியாளர்களும், பேராசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary : Anna University announced this year Engineering Colleges ranking list.