State Assembly Speakerதமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக தொடர்ந்து 2-வது முறையாக ப.தனபால் இன்று பதவியேற்று கொண்டார். அதேபோல் துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் பதவியேற்றார்.

தமிழகத்தில் 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை மே 23ஆம் தேதி பதவியேற்றது. புதிய சட்டப்பேரவை கடந்த 25ஆம் தேதி கூடியது. பேரவையின் தற்காலிக தலைவர் செம்மலை முன்னிலையில், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட 230 பேரும் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். பின்னர், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை செம்மலை வெளியிட்டார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது.

இதற்கிடையில், அதிமுக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக பி.தனபால், துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டனர். இருவரும் வேட்புமனுக்களை நேற்று முன் தினம் காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்தனர். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தனர். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் சட்டப்பேரவை சபாநாயகர் ஆக பி.தனபாலும், துணை சபாநாயகர் ஆக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று காலை அவர்கள் இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

புதியதாக பதவியேற்ற சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்தில், “நடுநிலை மாறாத தராசு முள் போல் சபாநாயகர் தொடர்ந்து செயல்படுவார் என நம்புகிறேன். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்களைப் போல் செயல்பட வேண்டும். ஒரு பக்கம் தேய்ந்தால்கூட நாணயம் செல்லா காசு ஆகிவிடும். அதேபோல் சபாநாயகரின் மரபை காக்கும்படி எதிர்க்கட்சி செயல்படும் என நம்புகிறேன். எதிர்க்கட்சிகள் மக்களுக்கு பயன்படக் கூடிய ஆக்கபூர்வ கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ” என்று கூறினார்.

சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்தில் “89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது. சட்டப்பேரவையில் திமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும்” என்று கூறினார்.

English Summary : State Assembly Speaker, Deputy Speaker sworn.