தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழு நடத்திய வட்டார சுகாதார புள்ளியல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 172 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங் களில் உள்ள மையங்களில் 11 ஆயிரத்து 165 பேர் எழுதினர். இந்த தேர்வு எழுதுபவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழு தலைவர் அருள்மொழி பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மொத்தம் 172 காலி பணியிடங்களுக்கு 11 ஆயிரத்து 165 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் அனைத்து வசதிகளும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்பு அம்சங்களுடனும் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
எனவே தேர்வு எழுதுபவர்கள், தங்களது தகுதி, திறமை மேல் நம்பிக்கை வைத்து நன்றாக படித்து எழுத வேண்டும். நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 13 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவுகள், டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி தாமதம் ஆனதால் முடிவுகளை வெளியிட முடியாமல் போனது. மிக விரைவில் குரூப்-1, குரூப்-2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
2016-17-ம் ஆண்டில் நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வுகள் குறித்த அட்டவணை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் முன்கூட்டியே தயாராவதற்காக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
English Summary: When test results of Group 1, Group 2, VAO ? New Information.