metro subwayசென்னை நகரின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் தற்போது கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. விரைவில் இந்த ரயில் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் பயணிகளுக்கான சேவை தொடங்கவுள்ளது. இந்நிலையில் அண்ணா சாலையில் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை பணி வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மே தின பூங்கா – ஏஜி-டி.எம்.எஸ். இடையே இரண்டு வழித்தடங்களில் சுரங்கப்பாதை பணிக்காக, கேமன் ஓ.ஜே.எஸ்.சி, மற்றும் ரஷியா நாட்டை சேர்ந்த மாஸ் மெட்ரோ ஸ்டராய் ஜே.வி ஆகிய நிறுவனங்களிடம் ரூ.1,947 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த பகுதியில் பாறைகள் இடையூறு உட்பட பல்வேறு காரணங்களால் ஒரு வழித்தடத்தில் 50 சதவீத பணியும், மற்றொரு வழித்தடத்தில் 47 சதவீத பணியும் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் பணியை பாதியில் நிறுத்திவிட்டு ரஷியா நிறுவனம் சென்றுவிட்டது. எனினும் கேமன் நிறுவனம் பணியை தனியாக தொடருவதாக கூறியது. ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதற்கிடையில் ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றத்த்ற்கு சென்றதால் சுமார் ஒரு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்தப்பணியை விரைந்து முடிக்க அப்கான்ஸ் நிறுவனத்துக்கு தற்போது பணியை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் இந்தப்பணியை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தேவையான கருவிகளை கொண்டு வருவதற்கும், ஊழியர்களை அழைத்து வருவதற்கான பணி தற்போது நடந்து வருகிறது. பணி எப்போது நிறைவடையும் என்று தற்போது கூற இயலாது. இதுதவிர சுரங்கப்பாதையில் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு ஆகிய 3 ரெயில் நிலைய பணிகள் மற்றொரு ஒப்பந்ததாரர் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

மே தின பூங்கா- ஏஜி- டி.எம்.எஸ் பாதையை தவிர மீதம் உள்ள பகுதிகளில் 84 சதவீத சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து விட்டது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

English Summary: August on wards Metro tunnel work in Anna Salai .