போலீஸ் வேலை என்றாலே 24 மணி நேரமும் டென்ஷனுடனும் மன அழுத்தத்துடனும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போலீஸார்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி வகுப்புகள் நடத்த சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகரக் காவலில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் போலீசார் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், பணியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவும் வாரந்தோறும் யோகாசன பயிற்சி வகுப்புகள் நடத்த இந்த உத்தரவை கமிஷனர் ராஜேந்திரன் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இன்று காலை சென்னையில் 26 இடங்களில் போலீசாருக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.

ராஜரத்தினம் விளையாட்டரங்கில் ஆயுதப்படை, போக்குவரத்து போலீசாருக்கு நடந்த யோகா பயிற்சியில் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் பங்கேற்றார். கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி, முகப்பேர் வேலம்மாள் பள்ளி, வட சென்னையில் பாரதி மகளிர் கல்லூரி, தியாகராய கல்லூரி உள்பட 26 இடங்களில் நடந்தது. இதில் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகிய யோகாசன வகுப்புகள் நடந்தது.

வட சென்னை மண்டலத்தில் 731 போலீசாருக்கும் தெற்கு மண்டலத்தில் 891 பேர், கிழக்கு மண்டலத்தில் 715 பேர், மேற்கு மண்டலத்தில் 631 பேர் உள்பட 4500 போலீசார் பங்கேற்றனர்.

கூடுதல் கமிஷனர்கள் சேஷாயி, சங்கர், அபய் குமார்சிங், தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் பவானீஸ்வரி, கூடுதல் துணை கமிஷனர் 41 பேர், இன்ஸ்பெக்டர்கள் 250-க்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.

English Summary : Yoga class for Chennai police to reduce stress.