தமிழக அரசின் தலைமைச்செயலாளராக பணிபுரிந்து வந்த ஞானதேசிகன் உள்பட் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரங்கள் வருமாறு:
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு ராம்மோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கண்காணிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிக்கவுள்ளார். ஞானதேசிகன் தமிழ்நாடு தொழிற்துறை வளர்ச்சித்துறையின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதே போல் மேலும் மாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்:
1. தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலராக பதவி வகித்த பிரதீப் யாதவ் தமிழக அரசின் கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பில் முன்பு சிவ தாஸ் மீனா என்பவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2. தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப் சிங் பேடி, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார், இந்தப் பொறுப்பில் இதற்கு முன்பு டாக்டர் எஸ்.விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது. ககன் தீப் சிங் பேடி கூடுதலாக கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன் வளத்துறை செயலராகவும் பொறுப்பு வகிப்பார்.
3. வனங்கள் மற்றும் சுற்றுசூழல் முதன்மை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஐ.ஏ.எஸ். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. ஹன்ஸ் ராஜ் வர்மா பணியாற்றிய வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலராக அதுல்யா மிஸ்ரா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக வருவாய் மேலாண்மை ஆணையராகவும் செயல்படுவார்.
5. ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary : Important people like Chief Secretary Gnanadesigan and other IAS officers transferred.