மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாடிக்கையாளர் தங்களுடைய அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் போது தம் வசதிக்கேற்ப மொபைல் தொலைபேசியில் வரும் அழைப்புகளை லேண்ட்- லைன் தொலைபேசிக்கு மாற்றிக் கொண்டு பெறலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த புதிய திட்டத்திற்கு “ப்ரீ-டு-ஹோம்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் காரணமாக பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் கட்டிடங்களுக்குள்ளும் சிக்னல் குறைபாடின்றி மிக துல்லியமாக வாய்ஸ் அழைப்புகளை தங்களது லேண்ட்-லைனில் பெற முடியும். நாள் முழுவதும் மொபல் உபயோகத்தினால் ஏற்படும் டென்சனில் இருந்தும் விடுதலை பெற முடிகிறது.

மொபைல் போனில் இருந்து லேண்ட்-லைன் தொலைபேசிக்கு அழைப்பு மாற்றம் செய்யும் இந்த வசதி எல்.எஸ்.ஏ.க்குள் மற்றும் எல்.எஸ்.ஏ.க்கு வெளியிலும் செய்ய முடியும். செல்போனில் இருந்து லேண்ட்-லைனுக்கு அழைப்பு மாற்றவும் செய்யும் வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் 4 விருப்பங்களின் அடிப்படையில் அழைப்பை மாற்றம் செய்து கொள்ளலாம். எப்போதும் கால் மாற்றும் முறை, பிஸியாக இருக்கும் போது மட்டும் மாற்றும் முறை, செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது கவரேஜ் ஏரியாவிற்கு வெளியில் இருந்தாலோ அல்லது அழைப்பை முற்றிலும் ஏற்காமல் இருந்தாலோ போன்ற விருப்பங்களில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிர்வாக குழுவின் இயக்குனர் ஆர்.கே. மிட்டல் கூறியபோது, “சிறந்த சேவையை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். ‘ப்ரீ டு ஹோம்’ என்ற இந்த திட்டம் தவிர ரம்ஜானை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு காம்போவவுச்சர் எஸ்.டி.வி. ரூ786 சிறப்பு சலுகையாக பி.எஸ்.என்.எல். செய்துள்ளது. இந்த வவுச்சரை பயன்படுத்தி ரூ.600 வரை பேசலாம். 786 எம்.பி. டேட்டா மற்றும் 786 எஸ்.எம்.எஸ். இலவசமாக பெறலாம். இந்த வவுச்சரின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள். இந்த சலுகை ஜூலை 6-ந் தேதி வரை பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.bsnl.co.in அல்லது www.tamilnadubsnl.co.in இணைய தளம் அல்லது இலவச தொலைபேசி எண்.1503-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆர்.கே.மிட்டல் கூறியுள்ளார்.

English Summary : BSNL to let users pick mobile calls from landline.