மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ரெயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களான சூடான பால், வெந்நீர், பால் பவுடர் ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கு ‘ஜனனி சேவா’ என்றும் பெயர் சூட்டப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த திட்டம் தற்போது சென்னை உள்பட நாட்டின் சில குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு, பச்சிளம் குழந்தைகளுக்கு தேவைப்படும் பால் பவுடர், பால் பாட்டில், வெந்நீர், சூடான பால் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த கடைக்காரர் கூறும்போது, ‘ரெயில்வே அமைச்சரின் அறிவித்தபடி, இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் என்னென்ன வாங்கி வைக்கவேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்து உள்ளனர். அந்த பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி பயணிகளுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக வாங்கி வைக்க திட்டமிட்டு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
English Summary : New facility introduced in Chennai Egmore Railway Station