12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே ஜூன் 20ஆம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.
மேலும் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு பதிவுப்பணி ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.
மேலும் www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
English Summary : Students who have finished 12th can now register for employment in their school.