vitcounselling15513மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டுள்ளார் இந்த தரவரிசைப் பட்டியலின்படி 199.75 கட் ஆப் மதிப்பெண்களுடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்வர் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் உள்ள 13 இளம் அறிவியல் மற்றும் இளம் தொழில் நுட்ப பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 4 ம் தேதி முதல் ஜூன் 11 ம் தேதி வரை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டன.

மொத்தம் உள்ள 2600 இடங்களுக்கு, 33 ஆயிரத்து 316 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார். இதில் 199.75 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்வர் என்ற மாணவர் முதலிடம் பிடித்தார். அதே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தட்சிணா மூர்த்தி இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ்குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தரவரிசைப்பட்டியல் அடிப்படையில், ஜூன் 27 மற்றும் 28 தேதிகளில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும், பொதுப்பிரிவினர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 4 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை நடைபெறுமெனவும் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி தெரிவித்தார். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25 முதல் 28 வரை நடைபெறும். வேளாண்மை கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் நடைபெறும்

வேளாண்மை படிப்புகளுக்கு மாணவர்களை விட மாணவிகளே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 22.9 சதவீதம் விண்ணப்பங்கள் அதிகமாக பெறப்பட்டுள்ளன. வேளாண்மை கல்லூரிகளில் தேவைகளை பொறுத்து மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தாண்டில் புதிதாக 2 வேளாண் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன” என்று துணை வேந்தர் மேலும் தெரிவித்தார்.

English Summary: Ranking list Released for agricultural studies. June 27th On wards Counselling.