isro_rocket_launch20 செயற்கைகோள்கள் அடங்கிய பி.எஸ்.எல்.வி. சி-34 நாளை மறுநாள் அதாவது ஜூன் 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 9.26 மணியளவில் தொடங்கியது.

இந்த 20 செயற்கை கோள்களில் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 17 செயற்கை கோள்களும் சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த சத்ய பாமாசாட், புனே என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த ஸ்லயம் ஆகிய செயற்கை கோள்களும் அடங்கும்.

பி.எஸ்.எல்.வி. சி-34 நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்.எல் வகையில் 14-வது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் ஆகும். பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் சுமந்து செல்லவுள்ள முதன்மை செயற்கை கோள் கார்டோசாட் 2 ஆகும். இந்த செயற்கைகோள் பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கை கோளின் எடை 727.5 கிலோ ஆகும். பூமியில் இருந்து 505 கி.மீ தொலைவில் செயற்கை கோள் நிலைநிறுத்தப்படும்.

இந்த செயற்கை கோளில் 986 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்தோனேசியாவின் லெபன் ஏ3, ஜெர்மனியின் பிரோஸ், கனடாவின் எம்3 எம் சாட், ஜி.எச்.ஜி சாட்-டி, அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென் 2-1, டவ் வகையை சேர்ந்த 12 செயற்கை கோள்கள் போன்றவையும் இதனுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்தியா விண்ணில் செலுத்தியுள்ள செயற்கை கோள்களின் ‘கார்டோசாட் 2’ பல விதங்களில் வித்தியாசமானது. இதன் 2 கேமராக்கள் 2½ மீட்டர் விட்டத்தில் இருக்கும் எந்தவொரு பொருளையும் விண்ணிலிருந்து முப்பரிமாணத்தில் 30 கிலோ மீட்டர் பரப்பளவில் கருப்பு- வெள்ளை படங்களாக எடுக்கும். இந்த கேமராக்களை செயற்கை கோளின் சுழற்சியையொட்டி கோணங்களை மாற்றி ஒரே பொருளை இருவேறு கோணங்களில் படமெடுத்து 3டி படங்களை தரகட்டுப்பாட்டு அறையில் பெற்றுக்கொள்ளலாம். தரகட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முடியாத நேரங்களில் இந்த படங்களை 120 ஜி.பி அளவில் சேமிக்கவும் வசதி உள்ளது.

English Summary: PSLV C34 Rocket with 20 Satellites Launching Tomorrow.