சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சென்னையை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த ஜூன் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிசிடிவி கேமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலையாளி நேற்று நள்ளிரவில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தனியார் விடுதி ஒன்றில் கொலையாளியின் உருவத்தை ஒட்டி ஒருவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அவர் சுற்றி வளைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலையாளி கைது செய்யப்பட்டவுடன் கத்தியால் தனது கழுத்தை தற்கொலைக்கு முயன்றதாகவும் இதனால் படுகாயம் அடைந்த கொலையாளி தற்போது நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருடைய தாயார் மற்றும் சகோதரிகள் ஆகியோர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், இன்று சென்னை போலீஸாரிடம் கொலையாளி முறைப்படி ஒப்படைக்கப்படுவார் என்றும் நெல்லை எஸ்.பி. விக்ரமன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை போலீஸார் விசாரணைக்கு பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
English Summary: Swathi killer arrested in sengottai