BL02_TRANS_CHENNAI_1197076gவங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த பாமாயில் எண்ணெய் கப்பல் மூழ்கி வருவதாக கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கப்பலின் சென்னை ஏஜென்ஸி விளக்கம் அளித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக கப்பலின் உள் தண்ணீர் புகுந்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த ஏஜென்ஸி விளக்கம் அளித்துள்ளது.

வங்கதேச நாட்டைச் சேர்ந்த தனியார் கப்பல் “எம்.டி. ஃபேட்ல் இ ரப்பி’ என்னும் கப்பல் இந்தோனேசிய நாட்டின் பெலாவான் துறைமுகத்திலிருந்து 5400 மெட்ரிக் டன் பாமாயில் ஏற்றிகொண்டு கடந்த ஜூன் 27ஆம் தேதி சென்னைத் துறைமுகத்திற்கு வந்தது.

பாரதி துறையில் கட்டப்பட்டிருந்த இந்தக் கப்பல் படிப்படியாக மூழ்கி வருவதாக நேற்று தகவல் பரவியது. இதுகுறித்து கப்பலின் சென்னையான ஏஜென்சி “ஜெஸ்பா சிப்பிங்’ நிறுவன இயக்குநர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கப்பலின் எடையை சீராகப் பராமரிக்கும் வகையில் தண்ணீர் நிரப்பும் அறைகளும் இருக்கும். மோசமான வானிலை காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக கடல் நீர் கப்பலுக்குள் புகுந்துவிட்டது. இதனையடுத்து, வழக்கத்தைவிட சற்று மூழ்கிய நிலையில் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டது.

மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கடல் நீர் உள்புகுந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டன. இப்போது கப்பல் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பாமாயில் இறக்குமதி செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கும். கப்பலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கப்பல் மூழ்கிவிட்டதாக பரவிய தகவல் வெறும் வதந்திதான் என்று கூறினார்.

English Summary: Chennai port of palm oil in the ship sinking