இந்திய ரயில்வே நிறுவனம் பயணிகளுக்கு பலவிதமான சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்று மூத்தகுடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைக்கட்டணம்.
ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகையை ரயில்வே துறை வழங்கி வருகிறது. இந்தச் சலுகையைப் பெற முன்பதிவு செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்யும்போது தங்களுடைய வயதை மட்டும் குறிப்பிட்டால் போதும் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது.
ஆனால், இனிமேல் முன்பதிவு படிவத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை வேண்டுமா? வேண்டாமா? என்பதை குறிப்பிட வேண்டும். கவனக்குறைவாகவோ அல்லது மறதியாகவோ அவ்வாறு குறிப்பிடவில்லை என்றால் கட்டணச் சலுகை கிடைக்காது என்ற புதிய நடைமுறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களில் பலர் மறதி, கவனக் குறைவு, விவரம் தெரியாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விண்ணப்பத்தில் இதுபோன்ற விவரங்களை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், இதனால் அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்தும் நிலை ஏற்படும் என்றும் இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையில் புதிய முறையை கைவிட வேண்டும் என்றும் மூத்த குடிமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மூத்த குடிமக்களின் இந்த கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
English Summary: In the new procedure, the railway tariff concession for senior citizens. To drop