இந்துக்கள் புனிதமாக கருதும் கங்கை நீர் தபால் அலுவலகங்களில் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கிய நிலையில் நேற்று முதல் நாளிலேயே புனித நீர் அஞ்சல் அலுவலகங்களில் அமோக விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரிஷிகேஷ், கங்கோத்ரி ஆகிய இரு இடங்களிலிருந்து கங்கை நீர் பெறப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ளவர்கள் இந்த புனித நீரை பெற வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனையை பாட்னாவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
உத்தரகண்ட் அஞ்சல் ஊழியர்கள் பாட்டிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு, நாடு முழுவதும் அனுப்பி வைக்கின்றனர். இதில், ரிஷிகேஷ் நீர் 200 மி.லி. அளவு ரூ.15-க்கும், 500 மி.லி. அளவு ரூ.22-க்கும், கங்கோத்ரி நீர் 200 மி.லி. பாட்டில் ரூ.25-க்கும், 500 மி.லி. பாட்டில் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில், முதல்கட்டமாக திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தருமபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலை, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை நேற்று தொடங்கியது. ஆனால், சில நிமிடங்களிலேயே இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்து கங்கை நீர் பாட்டில்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சென்னை மாநகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலேக்சாண்டர் கூறியுள்ளார்.
கங்கை நீர் அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் கருத்து கூறுகையில், கங்கை நீரில் புனித நீராடுவது இந்து மக்களிடையே பாரம்பரியமிக்க ஒன்றாக இருந்து வருகிறது. அதோடு, அனைவராலும் கங்கைக்கு சென்று வர முடியாது. இதற்காக, அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை செய்யப்படுவதை வரவேற்கத்தக்கது என்று கூறினர்.