9989_CCTVசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசியஸ் ஊழியர் சுவாதி கொலையை அடுத்து சென்னை நகர் மக்களின் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க சிசிடிடி கேமரா முக்கிய பங்கு வகித்ததால் பொது இடங்கள் மட்டுமின்றி அடுக்குமாடி குடியிருப்புகள், பெரிய வீடுகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இதுகுறித்த விழிப்புணர்ச்சியையும் சென்னை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிக சி.சி. டி.வி. கேமராக்களின் முக்கியத்துவம் குறித்தும், பாதுகாப்புடன் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்று சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையம் சார்பில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர் தளவாய்சாமி பேசியதாவது:

அடுக்குமாடிக் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள இடங்களில், மரங்கள் அடர்ந்த வெளிச்சம் குறைவான பகுதிகளில் தனியாக வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் செல்ல வேண்டும். அதிலும், வெளியிடங்களில் நடமாடும் போது குறைந்த அளவில் நகைகளை அணிந்து செல்ல வேண்டும்.

சாலையில் அதிக நடமாட்டம் இருந்தால் அந்தச் சாலை தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சி.சி. டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும்.

இதனால், குடியிருப்புப் பகுதிகளுக்கு யார் வந்து செல்கிறார்கள் என்பதை அறிய முடியும். குற்றச் சம்பவங்கள் நடந்தால், அதில் ஈடுபட்டோரை எளிதாக கண்டறியலாம். வீட்டு வேலைக்கு பணிக்கு அமர்த்தும் முன், அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வதோடு புகைப்படங்களைப் பெற்றுகொள்ள வேண்டும்.

பிரச்னைகள், அசம்பாவிதங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் போலீஸார் குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு வந்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு தளவாய்சாமி பேசினார்.

இந்த கூட்டத்துக்கு சூளைமேடு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமை வகித்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், புருஷோத்தமன், தலைமைக் காவலர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றார்.

English Summary: Meeting awareness regarding the importance of CCTV in Kodambakkam, Chennai.