20141124-141557145-2348-VIT-Universityதற்போதைய காலகட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி.இ, எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதை விட புதுப்புது வகையான படிப்புகளில் படிக்க விருப்பம் கொள்கின்றனர். இந்த வருடம் எந்த கல்லூரியில் எந்த வகையான புதிய கோர்ஸ்கள் தொடங்கப்பட்டுள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து இணையதளங்களில் அலசி ஆராயும் அளவுக்கு மாணவர்களுக்கு திறன் அமைந்துள்ளது. இவ்வாறான மாணவர்களுக்கு என கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களும் புதுப்புது வகையான கோர்ஸ்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக்.பேஷன் டெக்னாலஜி என்ற புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து, பேஷன் டெக்னாலஜி பட்டப் படிப்பைத் தொடக்கி வைத்து, புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்வி வளாக புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: நாட்டில் 4.5 கோடி பேர் நேரடியாகவும்,6 கோடி பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள ஜவுளித்தொழிலில் அடுத்த 3 ஆண்டுகளில் 6.1 கோடிபேர் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஜவுளி உற்பத்தித்துறையில் நவீன வடிவமைப்புகளை, எதிர்பார்க்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஜவுளி உற்பத்தித் தொழிலில் புதிய தொழில்நுட்பங்கள், வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பி.டெக். ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது 30 மாணவர்களைக் கொண்டு சென்னை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பில் அடுத்து வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அமராவதியில் 200 ஏக்கர் பரப்பில் தொடங்கப்பட இருக்கும் வி.ஐ.டி.ஆந்திர மாநில வளாகத்தின் கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அங்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்றார் அவர்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

English Summary : V.I.T. University Introduced B.Tech Fashion Technology Course